Wednesday 3 June 2015

தென்னையில் அதிக மகசூலுக்கு உரமிடுதல் அவசியம் : வேளாண் துறை யோசனை

பொன்னமராவதி வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு உரமிடுவதன் மூலம் காய்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் வருமானம் பெறலாம்.
இதுகுறித்து பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்தது:
தென்னை மரங்களுக்கு நடவு செய்த ஓராண்டு முதல் உரமிடுவது அவசியம். நன்கு வளர்ந்த தென்னை மரம் ஒன்று ஆண்டுக்கு சராசரியாக 540 கிராம் தழைச்சத்து, 250 கிராம் மணிச்சத்து மற்றும் 820 கிராம் சாம்பல் சத்துகளை நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது.
தழைச்சத்து உரமிடுவது பெண் பூக்கள் உற்பத்தி அதிகரிக்கவும், மணிச்சத்து உரமிடுவது வேர் வளர்ச்சிக்கும், சாம்பல் சத்து உரம் இடுவது குரும்பை உதிர்வதை தடுக்கவும், கொப்பரை எடையை கூட்டி எண்ணெய் சத்து அளவினை அதிகரிக்கவும் உதவுகிறது.
எனவே தென்னைக்கு உரமிட விரும்புவோர் மண் பரிசோதனை செய்து உரமிடலாம். மண் பரிசோதனை செய்ய முடியாதபட்சத்தில் பொதுப் பரிந்துரைப்படி ஆண்டுக்கு 2 தவணைகளாக ஜூன்-ஜூலை மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உரமிட வேண்டும்.
சராசரியாக 5 வருட வயதுள்ள ஒரு மரத்திற்கு தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோவும், யூரியா (தழைச்சத்து) 1300 கிராமும், சூப்பர் பாஸ்பேட் (மணிச்சத்து) 2000 கிராமும், மூரியேட் ஆப் பொட்டாஷ் 2000 கிராமும், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவும், தென்னை நுண்சத்து 1 கிலோவும், நுண்ணியிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (இதரவகை) 100 கிராமும், பாஸ்போபாக்டீரியா 100 கிராமும் இட வேண்டும்.

தென்னை மரங்களுக்கு இடுவதற்கு தேவையான நுண்ணுயிர் உரங்கள் பொன்னமராவதி வேளாண் விரிவாக்க மையத்தில் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. எனவே தென்னை விவசாயத்தில் காய்ப்புத் திறனை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற்று அதிக வருமானம் ஈட்ட விரும்பும் விவசாயிகள் தென்னைக்கு உரமிட்டு பயனடைய வேண்டும்

Source : Dhinamani

No comments:

Post a Comment