Friday 17 July 2015

முளைப்பு திறன் குறைந்தால் நெற்பயிர் மகசூல் பாதிக்கும் வேளாண் அலுவலர் ஆலோசனை :


கரூர்,: முளைப்பு திறன் குறைந்தால் பயிர் மகசூல் பாதிக்கும் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார். கரூர் காந்திகிராமம் விதைப் பரிசோதனை ஆய்வக மூத்த வேளாண்மை அலுவலர் தாகூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருள் விதை, தரமான விதைகளை விதைப்பதன் மூலமே அதிக மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு மற்றும் விதைப்பரிசோதனை செய்யப்பட்ட சான்று விதைகளே ஆகும். விதைப் பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரக கலப்பு என 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

புறத்தூய்மை என்பது விதையின் சுத்தத்தை குறிப்பதாகும். அதில், களை விதைகள், பிற பயிர் விதைகள், உயிர்ப்பற்ற பொருள் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. ஈரப்பதம் என்பது பயிர் வாரியாக ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் அதிக பூச்சி தாக்குதல் மற்றும் நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்டு தரம் குறைய வாய்ப்புள்ளது. முளைப்புத்திறன் பரிசோதனையின் விதை மாதிரிகளின் முளைப்புத்திறன் பரிசோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு விதைக்கும் குறிப்பிட்ட முளைப்புத்திறன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முளைப்புத்திறன் குறைந்தால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கும். பிறரக கலப்பு என்பது ஒரே பயிரில் பல்வேறு ரக விதைகள் கலந்திருப்பது ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிறரக கலப்பு இருந்தால் விதைகள் விற்பனைக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் மூலம் வேளாண்மை துறையினரால் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும், தனியார் உற்பத்தியாளர்களின் விதைகளுக்கும், விதைப்பரிசோதனை அடிப்படையிலேயே சான்று அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன.

விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பகுப்பாய்வு முடிவுகள் பயன்படுகிறது. விதைப்பரிசோதனை ஆய்வுக்கட்டணமாக பணி விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.30மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை நேரிலோ அல்லது மணிஆர்டர் மூலமாகவோ வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், இரண்டாவது குறுக்குத்தெரு, திண்ணப்பா நகர், காந்திகிராமம் கரூர்4 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.பணி விதைமாதிரிகள் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்விற்கு அனுப்பும் போது, விதை மாதிரியின் அளவு கம்பு, பனிவரகு, ராகி, முள்ளங்கி, கீரை விதைகள், எள் போன்ற சிறிய அளவிலான விதைகள் எனில் சுமார் 50கிராம் அளவுக்கு குறையாமலும், நெல், மக்காச்சோளம், உளுந்து, பயறு வகைகள் போன்ற பெரிய அளவிலான விதைகளாக இருந்தால் சுமார் 150 கிராமிற்கு குறையாமலும் அனுப்ப வேண்டும். விதை மாதிரிகளை துணிப்பை அல்லது பாலித்தீன் பைகளில் விதைகளை இட்டு பகுப்பாய்வு முடிவுகளுக்கு  அனுப்ப வேண்டிய முகவரி, பயிர் ரகம், குறியீட்டு எண், விதை அளவு ஆகிய விவரங்கள் அடங்கிய சீட்டை இணைத்து அனுப்ப வேண்டும் என கருர் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தாகூர் தெரிவித்துள்ளார்.
Source : dhinakaran

No comments:

Post a Comment