Friday 19 December 2014

சிக்கல் ! : வீரிய ஒட்டு ரக பருத்தி சாகுபடியில்... : பயிரிடும் பரப்பளவு குறைகிறது.

பதிவு செய்த நாள்

20டிச
2014 
01:35
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி பகுதியில் வீரிய ஒட்டு ரக பருத்தி சாகுபடிக்கு தொடர்ந்து கூலியாட்கள் வேலைக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் பயிரிடும் பரப்பு வேகமாக குறைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி பகுதியில் நெல், கரும்பு பயிருக்கு அடுத்ததாக பருத்தி அதிகம் சாகுபடி செய்கின்றனர். தியாகதுருகம் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி பருத்தி பயிரிடப்பட்டுள் ளது. இறவையில் வீரியரக ஒட்டு பருத்தி செடிகளும் சாகுபடி செய்து நிகர லாபம் பெற்று வருகின்றனர்.
பருத்தி சந்தை
கள்ளக்குறிச்சியில் பருத்தி சந்தை துவக்கப்பட்டு ஆண்டுதோறும் கணிசமான விற்பனை நடக் கிறது. விவசாயிகளும் அலைச்சலின்றி விளைவித்த பஞ்சை விற்று பயனடைகின்றனர். மானாவாரி பருத்தியை பொருத்தவரை ஆறு மாத பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. களைபறித்து மருந்து தெளித்தால் போதுமானது. அளவான மழை பெய்தால் விளைந்து நல்ல மகசூல் கிடைக்கும். பஞ்சு வெடிக்கும் தருணத்தில் கனமழை, பனி தாக்கம் இல்லாமல் இருந்தால் தரமான பஞ்சு அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும்.
இதற்கு நேர் எதிராக ஒட்டுரக பருத்தி சாகுபடி செய்யும் முறை உள்ளது. இது இறவையில் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு தனியார் விதை நிறுவனங்கள் விதை, உரம், பூச்சு மருந்துகள் வழங்குகின்றன. பஞ்சு விளைந்ததும் அதிலிருந்து விதை, பஞ்சுகளை தனியே தனியார் விதை நிறுவனங்களே நேரடியாக சென்று கொள்முதல் செய்கின்றன. மானாவாரி பருத்தியை விட இதில் கூடுதல் லாபம் கிடைத்தாலும், கூலியாட்கள் தொடர்ந்து கிடைப்பதில் பிரச்னை உள்ளது.
கிராசிங்ஒட்டுரக பருத்தியில் ஆண், பெண் செடிகள் தனியாக பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கர் பெண் செடிக்கு, 15 சென்ட் அளவு ஆண் செடி வளர்க்கப்படுகிறது. தினமும் ஆண் செடியில் இருந்து பூவை பறித்து மகரந்தத்தை பெண் செடி பூவில் தேய்க்க வேண்டும். இதற்கு "கிராசிங்' செய்தல் என்று பெயர். "கிராசிங்' செய்த பூ மீது சிவப்பு நிற பிளாஸ்டிக் பேப்பரை அடையாளத்திற்கு மாட்டுகின்றனர். ஏக்கருக்கு குறைந்தது 15 கூலியாட்கள் என 120 நாட்கள் தினம் "கிராசிங்' செய்ய வேண்டும். அப்போது தான் அதிக காய் உருவாகி மகசூல் அதிகரிக்கும்.
பெண்கள் தயக்கம்
இதற்கு தினமும் ஆட்கள் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டும். காய்களில் புழு தாக்காமல் இருக்க வீரியமான மருந்துகள் தெளிப்பதால், பலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, மலட்டு தன்மை ஏற்படுவதாக கருத்து உள்ளது. இளம்பெண்கள் பூப்பெய்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் பருத்தி "கிராசிங்' பணிக்கு வர இளம்பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆட்கள் கிடைப் பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் ஒட்டுரக பருத்தி சாகுபடி பரப்பு வேகமாக குறைந்து வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலை செய்தால் கூடுதல் லாபம் ஈட்டமுடியும். ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்து வருவதால் ஒட்டுரக பருத்தி சாகுபடி செய்வது இப்பகுதியில் குறைந்து விட்டது. சொந்த ஆட்கள் இருப்பவர்கள் மட்டுமே குறைந்த பரப்பில் ஒட்டு ரக பருத்தி சாகுபடி செய்கின்றனர். கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பருத்தி பயிரிடும் பரப்பு மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source: 

No comments:

Post a Comment