Friday 29 May 2015

ரூ. 2.80 கோடிக்கு சின்ன வெங்காயம் விற்பனை

செட்டிக்குளம் வணிக வளாகத்தில் ரூ. 2.80 கோடிக்கு சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்க் கூட்டத்திற்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம்
கிராமத்தில் ரூ. 114.90 லட்சம் மதிப்பீட்டில் சின்ன வெங்காயத்துக்கான வணிக வளாகம் மற்றும் இதர காய்கறிகளுக்கான குளிர்பதன சேகரிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6,190 விவசாயிகள் தங்களது 15,93,364 கிலோ சின்ன வெங்காயத்தை ரூ. 2.80 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். இதேபோல, எளம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இதுவரை 5,355 குவிண்டால் பருத்தி ரூ. 2.5 கோடிக்கு விற்பனையானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நெல் 78 ஹெக்டேரிலும், கரும்பு 174 ஹெக்டேரிலும் உள்பட மற்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும்,வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 119.65 மெ.டன், நிலக்கடலை 30.298 மெ.டன், பயறுவகை விதைகள் 3.421 மெ.டன் அளவில் விதைகள் இருப்பில் உள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 739 மெ.டன், டி.ஏ.பி. 368 மெ.டன் உள்ளிட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் உரங்கள் வாங்கும்போது ரசீது கொடுக்கப்படாமல், அதிக விலை, உரங்களின் தரக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார உதவி இயக்குநர்களை அணுகி தீர்வு காணலாம்.
நடமாடும் மண் பரிசோதனை மையம்: ஒவ்வொரு கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் அனைத்து விவசாயிகளும் மண் மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு செய்து கொள்ளலாம். வரும் ஜூலை மாதத்தில் பயிர்க்கடன் மேளா நடைபெற உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 10 சதவீத விவசாய குடும்பங்களுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சேவை மையம்:
கொளக்காநத்தம், மருவத்தூர், புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. இங்கு அதிகளவில் பயிர்சாகுபடி செய்யப்படும் நெல், பருத்தி, மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல், அதை கட்டுப்படுத்தும் முறைகள், நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றிய விளக்கப்படங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
Source : Dhinamani

No comments:

Post a Comment