Thursday 28 May 2015

ஏற்றுமதியாகும் தேனி திசு வாழை: அன்னிய செலாவணி அமோகம்

தேனி: தேனி மாவட்டத்தில் திசு வாழை உற்பத்தியால், தேனி மாவட்டத்தில், ஒரு மாதத்தில், 71 லட்சம் ரூபாய் அன்னிய செலாவணியாக கிடைத்துள்ளது.
இங்கு, 27 ஆயிரம் ஏக்கரில் திசு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வாழை கொள்முதல் செய்யப்பட்டதால், தேனி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குளிர்பதன கிடங்கு அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் வாழைகள் இருப்பு வைக்கப்படுகின்றன. திசுவாழையை பக்குவப்படுத்தி சவுதி, ஈரான், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். திசுவாழையை உரிய பக்குவத்தில் வெட்டி, 1 சதவீத கார்பன்டைசீன் கலந்த நீரில் கழுவுகின்றனர். பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்து, உள்ளிருக்கும் காற்றை உறிஞ்சி, 14 டிகிரி சென்டிகிரேட் குளிர்பதனம் செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 20 ஆயிரம் கிலோ வீதம், 12 கன்டெய்னர்களில் அனுப்பப்படுகின்றன. இவை, 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

வாழை ஏற்றுமதி சங்க தலைவர் மகேந்திரன் கூறியதாவது: குளிர்பதன வசதியால், 240 டன் திசு வாழை ஏற்றுமதி செய்துள்ளோம். தினமும், 15 டன் வாழைகள் வருகின்றன. இதில், 11 முதல் 12 டன் ஏற்றுமதியாகிறது; மீதி உள்ளூர் விற்பனைக்கு செல்கிறது. நோய் பாதிப்பு இன்றி தரமான வாழையை கிலோ, 10 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் வாங்க தயாராக உள்ளோம். ஒரு மாதத்தில், 71 லட்சம் ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment