Wednesday 3 December 2014

அவகோடா பழம் சாகுபடியில் சாதனை

வெளிநாடுகளில் ஆப்பிள், ஆரஞ்ச் பழங்களுக்கு இணையான பழமாக கருதப்படுபவை அவகோடா. மழை அதிகம் பெய்யும் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பணப்பயிர்களின் இடையே அவகோடா சாகுபடி செய்யப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவில் அவகோடா மரங்கள் உள்ளன. காமனூர் கிராமத்தில் இப்பழ சாகுபடியில் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார் விவசாயி வீரஅரசு. நான்கு தலைமுறையாக விவசாயத்தை தொடர்ந்து வரும் இவரது தோட்டத்தில் காப்பி, ஆரஞ்சு, மிளகு போன்ற பயிர்களினூடே அவகோடா சாகுபடி செய்கிறார்.
இப்பழ சாகுபடி பற்றி வீரஅரசு கூறியதாவது:
வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் அவகோடா சுவையை தெரிந்தவர்கள் என்ன விலை கொடுத்தும் வாங்க தயங்கமாட்டார்கள். இப்பகுதியில் நான்காவது தலைமுறையாக நான் விவசாயம் செய்கிறேன். 2004ம் ஆண்டில் தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பார்த்திபன் அறிவுரையால் எனது தோட்டத்தில் நிழல் மரங்களாக அவகோடா கன்றுகளை 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 50 கன்றுகளாக 500 கன்றுகள் நடவு செய்தேன். தாண்டிக்குடியில் விவசாயி மோகன சுந்தரத்தின் தோட்டத்தில் பெரிய பழங்கள் விளைந்தன. அதனால் அங்குள்ள மரத்தின் கிளைகளை எடுத்து வந்து எனது தோட்டத்தில் நடவு செய்த கன்றுகளில் ஒட்டுக் கட்டினேன். இதில் 60 சதவீதம் வெற்றி கிடைத்தது.
300 மரங்கள் வளர்ந்து நான்காவது ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்க துவங்கியது. 2014-15ம் ஆண்டில் மரம் ஒன்றிற்கு ரூ.2,000 வீதம் ரூ.6 லட்சம் வருவாய் கிடைத்தது.
இந்த மரங்கள் சுத்தமான இயற்கை வழி விவசாயத்தில் வளரக்கூடியவை. வன விலங்குகள் இதனை சேதப்படுத்தாது. தற்போது இந்த பழங்கள் உணவுப் பொருளாக மட்டும் அல்லாது பேஷியலுக்காக அழகு நிலையங்களிலும் பயன்படுத்தப்படுவதால், இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணைக்கு பதிலாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த மரத்தை விவசாயிகள் நம்பிக்கையுடன் நடவு செய்யலாம். ஒரு பழம் 500 கிராம் முதல் 1.250 கிலோ வரை இருக்கும். ஒரு மரம் 200 முதல் 300 காய்கள் காய்க்கும். ஒரு மரத்திற்கு 60 கிலோ தொழு உரம் மட்டும் போதுமானது. ஒரு கிலோ ரூ.60 க்கு விற்பனையாகிறது.
வேலையாட்கள் உதவி அதிகம் தேவைப்படாத, அதிக லாபமும், நல்ல எதிர்காலமும் கொண்ட வறட்சியை தாங்கி மானாவரி சாகுபடியில் லாபம் தரும் அவகோடா விவசாயிகளுக்கு ஒருபோதும் நஷ்டத்தை கொடுக்காது என்றார்.
இவரோடு பேச 94438 33309.
டபிள்யு.எட்வின்
மதுரை.


Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22955&ncat=7

No comments:

Post a Comment